முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையானார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை அடுத்து அவர் முன்னிலையாகியுள்ளார்.
முறையான நடைமுறைகளைப் பின்பற்றி நாட்டுக்குக் கொண்டுவரப்படாத வாகனம் ஒன்று தொடர்பான விசாரணைக்காகவே அவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வாகனம் 2020,2021 காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, சுங்கப் பிரிவு விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்தது.
வாகனத்தை இறக்குமதி செய்ததற்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க அதன் உரிமையாளர் தவறியதைத் தொடர்ந்து, வாகனம் அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த வாகனம் சட்டவிரோதமான முறையில் பாகங்கள் இணைத்துத் தயாரிக்கப்பட்டது எனப் பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே பல சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே யோஷித ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்படுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் யேசித்தவினால் இதேபோன்று நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட வாகனங்கள் குறித்துப் பயங்கரவாத விசாரணைப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
முறையற்ற வழிகளில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் உயர் ரக மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்கள் உள்ளிட்ட 18 வாகனங்களை இதுவரை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னர் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு, அதனுள் இருந்த வாகனங்களின் செஸி எண்கள் ஏனைய வாகனங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த மறைக்கப்பட்ட கண்டெய்னர் நீதிமன்ற உத்தரவின் மூலம் பின்னர் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
