தேசிய நல்லிணக்கக் குழுவில் இந்து சமயப் பிரதிநிதித்துவம்: ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம்

 

தேசிய நல்லிணக்கக் குழுவின் கூட்டங்களில் இந்து சமயப் பிரதிநிதிகள் அழைக்கப்படும் முறைமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அரசாங்கம் சார்பில் அமைச்சர் பதிலளித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர், "தேசிய நல்லிணக்கக் குழுவில் பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் நிலையில், இந்து சமய சார்பாக தகுதியான அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அழைக்கப்படுவதில்லை என்ற கவலை இந்து சமூகத்தினரிடையே நிலவுகிறது. 


அகில இலங்கை இந்து மாமன்றம், கம்பன் கழகம், இந்து குருமார் ஒன்றியம் போன்ற அமைப்புகளிடம் இருந்தோ அல்லது இந்து சமய விவகார திணைக்களத்திடம் இருந்தோ எவ்வித பரிந்துரைகளும் பெறப்படாமல், தற்போதைய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவரின் நெருங்கிய குருக்கள் ஒருவரே தொடர்ந்து அழைப்பு பெறுகிறார் என குற்றச்சாட்டு உள்ளதே" எனக் கேள்வியெழுப்பினார்.


இதற்கு பதிலளித்த அமைச்சர், "ஏனைய மதங்களில் அதன் முக்கிய தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் யார் என்பதில் சமூகத்தில் ஒரு தெளிவான புரிதல் உள்ளது. இருப்பினும், இந்து சமயத்தைப் பொறுத்தமட்டில், பொருத்தமான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து குழுவில் இணைக்கும் பொறுப்பு இந்து சமய விவகாரத் திணைக்களத்திற்கே உரியது. 

இந்த விடயம் குறித்து உரிய கவனத்திற்கு கொண்டு சென்று, இந்து சமய விவகார திணைக்களத்துடன் கலந்துரையாடி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Post a Comment