இந்தியா மத்திய பிரதேசத்தில் வீதி விபத்து 8 பேர் பலி 32 பேர் காயம்

 

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேர் காயமடைந்துள்ளனர்.

குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலை முடித்து விட்டு சில கூலி தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தில் உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி பகுதியில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் பிந்த் மாவட்டத்தில் பிந்த் குவாலியர் தேசிய நெடுஞ்சாலையில் சிம்கா கிராமம் அருகே வந்தபோது வீதியில் கால்நடைகள் படுத்திருந்தன.

அவற்றின் மீது மோதி விடாமல் இருக்க சாரதி முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே வந்த லொறி மீது மோதியது. இதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 32 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Post a Comment