இந்த ஆண்டின் இறுதியில் எல் நினோ நிலைமை மிகவும் வலுவாக மாறுவதற்கான சாத்தியம் 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 75 ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோக்களை விடவும் இது வலுவானதாக இருக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன,
எல் நினோ நிலைமை படிப்படியாக வளர்ந்து வருகிறது. ஆண்டின் இறுதியில் மிகவும் வலுவான எல் நினோவாக மாற 90 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக உலகளாவிய முன்னறிவிப்புகள் கூறுகின்றன. 1950 முதல் இதுவரை ஏற்பட்ட அனைத்து எல் நினோக்களையும் விட இது வலுவாக இருக்க 70 சதவீதம் சாத்தியம் இருப்பதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 37 சதவீதம் வரை குறைந்துள்ளதால் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அந்த திணைக்களம் கோரியுள்ளது.
நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியலாளர் எச் என் பி எஸ் டி ஹேரத் கூறுகையில், நீர்பாசன திணைக்களம் நிர்வகிக்கும் 74 பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் கொள்ளளவு தற்போது சுமார் 37 சதவீதமாக உள்ளது. தற்போதுள்ள நீர் சிறுபோக செய்கைக்கும் நவம்பர் டிசம்பர் மழை வரும் வரையும் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
அதேநேரம் நாடு முழுவதும் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 100 சதவீதம் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.
அதன் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார கூறுகையில், சில மாவட்டங்களில் வறட்சி இருந்தாலும் நீர் விநியோகம் குறைக்கப்படவில்லை. நீர் விநியோகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் சில நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 56 சதவீதத்திற்கும் கீழ் சென்றுள்ளது என்றார்.
