திவுலப்பிட்டிய நகரில் பேருந்து சாரதி ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட மூவரை ஓகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவுலப்பிட்டிய நகரில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்றின் பின்னால் வந்த கார் ஒன்று திடீரென பேருந்தை மறித்து நிறுத்தியது. அதிலிருந்து இறங்கிய பெண் ஒருவரும் இரு ஆண்களும் வாள்களுடன் பேருந்து சாரதியை தாக்க முயன்றுள்ளனர். இந்த முழு சம்பவமும் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரால் கைப்பேசியில் காணொளியாக பதிவு செய்யப்பட்டு பின்னர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இந்த காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட திவுலப்பிட்டிய பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நேற்று 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை ஓகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
