மொணராகலை மக்களுக்கு வந்த குட்நியூஸ்... 267 குழாய் கிணறுகள் புனரமைப்பு, 100 புதிய கிணறுகள்!

மொணராகலை மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்ட 267 பழைய குழாய் கிணறுகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பயன்பாடின்றி கைவிடப்பட்டுள்ள இந்தக் கிணறுகள் அனைத்தும் முதலில் சுத்திகரிக்கப்படுவதுடன், அவற்றின் நீரின் தரம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளன.

இதன் முதற்கட்ட பணிகள் மொணராகலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாகந்தனமுல்ல, ரத்தனபிட்டிய மற்றும் வெலியாய கிராம நிலதாரி பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக 100 குழாய் கிணறுகளை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிலத்தடி நீர் பிரிவினால் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணிகளுக்கு மொணராகலை மாவட்ட அனர்த்த மேலாண்மை அலகு, பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைப் பிரிவு மற்றும் மொணராகலை பிரதேச சபை ஆகியவை ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.

மொணராகலை மாவட்டத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 75 கிராம நிலதாரி பிரிவுகளில் வசிக்கும் சுமார் 15,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மொணராகலை, மெத்தகம மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, குடிநீர் தட்டுப்பாட்டிற்கு உடனடி தீர்வாக அனர்த்த நிவாரணப் பிரிவினர் மற்றும் பிரதேச சபைகள் இணைந்து 39 நீர் தாங்கி ஊர்திகள் (Bowser) மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக குடிநீர் விநியோகித்து வருகின்றனர்.

Post a Comment