நாட்டிற்கு எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை உண்டியல் முறை மூலம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் நாட்டின் பிரதான நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று பிற்பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மேலதிக நீதவான் வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ஜெப்ரி மொஹமட் என்ற பிரதான சந்தேகநபர் பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி 36 நிறுவனங்களை பதிவு செய்துள்ளார். அந்த நிறுவனங்களுக்கான வங்கிக் கணக்குகளை திறக்கும் போது உரிய விதிகளை பின்பற்றாமல் இந்த நான்கு வங்கி அதிகாரிகளும் உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நேரில் சந்தித்து வங்கி நடவடிக்கைகளை மேற்கொடுத்ததாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்த சேவைக்காக வங்கி அதிகாரிகளுக்கு வாரந்தோறும் 30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபா வரை பணம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அதிகாரிக்கு 10 லட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நாட்டிலிருந்து வெளியேறிய பணத்தில் 6.5 மில்லியன் ரூபா போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறான ஒரு பெரிய நிதி மோசடி தொடர்பில் வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்படுவது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கணக்கு திறப்பது தொடர்பான இறுதி முடிவு மேல் அதிகாரிகளுடையது எனவும் எனவே பிணையில் விடுமாறும் கோரினர். ஆனால் நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்தது.
