வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11ஆம் கட்டம்: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11ஆம் கட்டத்திற்கான (2026/2027) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் அரசுசாரா உயர்கல்விப் பிரிவின் மேலதிக செயலாளர் எச்.டீ. சந்திமா ஜானகி மற்றும் அதன் பணிப்பாளர் சமிந்த அத்தரவத்த ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தின் 11ஆம் கட்டத்திற்கு தகுதியான மாணவர்களிடமிருந்து 2026 ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 2026 செப்டம்பர் 27 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதுடன், குறைந்தபட்சம் மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி (S) பெற்றிருத்தல், க.பொ.த. உயர்தரப் பரீட்சை அல்லது க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தபட்சம் சாதாரண சித்தி (S) பெற்றிருத்தல் மற்றும் பொது அறிவு பரீட்சையில் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்கள் பெற்றிருத்தல் ஆகிய அடிப்படைத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

மேலும், விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதியான 2026.09.27 அன்று 25 வயதுக்கு மேற்படாத மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் எனச் சுட்டிக்காட்டிய அதிகாரிகள், இதன் மூலம் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், வர்த்தகம், மானிடவியல் மற்றும் கலைத்துறை ஆகிய பல துறைகளின் கீழ், பட்டங்களை வழங்கும் 16 கல்வி நிலையங்களினூடாக 129 இற்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை மாணவர்கள் தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அமைச்சின் உத்தியோகபூர்வ ஊடகங்கள் மற்றும் தொடர்பாடல் வழிகளின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


Post a Comment