கண்டி எசல பெரஹேராவை முன்னிட்டு, இன்று (18) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு பல மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று முதல் கண்டி எசல பெரஹேராவின் முதல் கும்பல் பெரஹேரா வீதிகளில் வலம் வரவுள்ள நிலையில், பெரஹேரா நிறைவடையும் 28ஆம் திகதி வரை குறித்த மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.
இதன்படி, கண்டி கடவத்த சதாரா மற்றும் கங்காவத்த கோரள பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குண்டசாலை பிரதேச செயலகத்தின் நத்தாரம்போத்த கிராம அலுவலர் பிரிவில், பிரதான வீதியை அண்டிய எரிபொருள் நிலையம் வரையிலான பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரஹேரா காலப்பகுதியில் பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
