தனமல்வில தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிகவெவ பகுதியில் கஞ்சா தோட்டமொன்றை சோதனையிட்டு அதன் உரிமையாளரிடம் 5 லட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை பிணையில் விடுவிக்க வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் 2 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மொனராகலை பிராந்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அண்மையில் நிகவெவ பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது இந்த இலஞ்ச பரிமாற்றம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மொனராகலை வலய ஊழல் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள், ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் சாரதி ஆகியோர் அடங்குகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
