வீதிகளில் நடந்து செல்லும்போது ஹெட்ஃபோன் அல்லது இயர்ஃபோன் மூலம் இசை கேட்டுக்கொண்டு செல்வோருக்கு எதிராக இனி எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய விபத்து தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல இந்த விபரங்களை வெளியிட்டார்.
தற்போது இவ்வாறான பாதசாரிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை மாத்திரமே விடுத்து வரும் நிலையில், விரைவில் நீதிமன்ற நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 10-க்கும் மேற்பட்டோர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
2026 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,323 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 1,389 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியை விட அதிகமாகும்.
விபத்துக்களைக் குறைக்க 3 கிலோமீட்டர் தூரம் வரை கண்காணிக்கும் அதிநவீன வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கைகள் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அலட்சியமாக வீதியைக் கடக்கும் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் சாரதிகளே விபத்துக்களுக்கு அதிகம் முகங்கொடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தவறிழைப்போரின் சாரதி உரிமங்களை ரத்துச் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
.jpeg)