நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சபைக்கு அணிந்து வந்திருந்த ஆடை தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் சபையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிபோது ஆடையைக் கழற்றிக் காண்பிக்கவா என அர்ச்சுனா எம்பி அநாகரீகமாக பதிலளித்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 9) சலசலப்பை ஏற்படுத்தியது.
உறுப்பினர் ஜெகதீஸ்வரன் எழுப்பிய பிரச்சினைக்கு உடனடியாகப் பதிலளித்த அர்ச்சுனா எம்.பி., தான் அணிந்து வந்திருக்கும் ஆடை பாராளுமன்ற மரபுகளுக்கு உட்பட்டதுதான் என்று வாதிட்டார்.
ஆவேசமாகப் பேசிய அவர், “நான் பாராளுமன்றத்திற்குப் பொருத்தமான ஆடையையே அணிந்து வந்துள்ளேன். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், வேண்டுமென்றால் கழற்றிக் காண்பிக்கவா?” என்று சவால் விடுத்தார்.
இதன்போது தலையிட்ட சபாநாயகர், “ஆடை குறித்த விவாதம் தேவையில்லை, அது ஒரு பிரச்சினையல்ல” என்று தெரிவித்து, அர்ச்சுனா எம்.பி.யை தனது ஒழுங்குப் பிரச்சினையைச் சமர்ப்பிக்க அனுமதித்தார்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் நடைமுறை விதிகளின்படி, உறுப்பினர்கள் சபைக்கு வரும்போது கண்ணியமான உடைகளை அணிய வேண்டும் என்பது மரபாகும். இருப்பினும், 'கண்ணியமான உடை' என்பது குறித்த வரைவிலக்கணம் அவ்வப்போது விவாதங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
