நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் போன்ற நெருக்கடி நிலைமைகளுக்கு சிறைச்சாலை நிர்வாகத்தின் வீழ்ச்சியும் திறமையின்மையுமே காரணம் என்பதால், இதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி அன்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சமயம் பிரஸ்தாபித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்திலும் தற்போதைய அரசாங்கம் தப்பியோட முடியாது என வலியுறுத்தியுள்ளார்.
முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது, ஆனால் இன்று நீர்கொழும்பு சிறைச்சாலையை மையமாகக் கொண்டு இடம்பெற்ற சம்பவத்தின் மூலம் அரசாங்கத்தின் 'முறைமை மாற்றம்' தோல்வியடைந்துள்ளது என்பது தெளிவாகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினுள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அரசாங்கத்திற்கு முடியாதா எனவும், சிறைச்சாலைகளுக்குள் மனிதாபிமான ரீதியிலான நிர்வாகமொன்றை முன்னெடுக்க முடியாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், நாட்டு மக்கள் இதனை அவதானித்துக் கொண்டிருப்பதால் அரசாங்கம் இதற்கு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கத்திற்கு சாதகமான முறையில் அறிக்கைகளைத் தயாரிக்கும் குழுக்களை அமைக்காமல், பாராளுமன்றத்தில் சுயாதீனமான, பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணையொன்று அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கல்வி, பொருளாதாரம், சிறைச்சாலை, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகிய அனைத்தும் உள்ளடங்கிய தேசிய பாதுகாப்பு என்பது ஒரு பரந்த பார்வையாகும் என விவரித்துள்ள சஜித் பிரேமதாச, அன்று அகந்தை மனப்பான்மையுடன் தேசிய பாதுகாப்பு குறித்து மேலதிக வகுப்புகளை நடாத்துகிறோம் என கூறிய இந்த அரசாங்கத்தின் கீழ் இன்று நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சி கண்டுள்ளது என்றும், எனவே தன்னிச்சையாக நடந்து கொள்வதைத் தவிர்த்து, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நேர்மையான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்தார்.
