நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பொறுப்பேற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

 


நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட கொடூரமான மோதல் சம்பவம் தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆழமான வருத்தத்தையும் அளித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அமைச்சர், நீதித்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், இந்த அசம்பாவிதத்திற்கான பொறுப்பைத் தான் ஏற்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை பாதுகாப்பு அதிகாரிகளால் முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், அங்கு ஏற்பட்ட மனித உயிரிழப்புகளை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த துரதிர்ஷ்டவசமான மனித உயிரிழப்புகளால் தான் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இக்கோரச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர், இவ்வாறானதொரு விபரீதம் இனிவரும் காலங்களில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். 

மேலும், இந்த விவகாரத்தில் எந்தவொரு தனிநபர் மீதும் பழி சுமத்துவதை விட, உண்மைகளைக் கண்டறிவதிலும், இதுபோன்ற சம்பவங்கள் மறுபடி நிகழாமல் தடுப்பதிலுமே தனது முழுமையான கவனம் உள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment