Posts

முள்ளம்பன்றியுடனும் பூனையுடனும் உலா வரும் பொலன்னறுவை சிறுமி!


சிறுமி ஒருவர் வயல்வெளியில் ஒரு முள்ளம்பன்றியுடனும், பூனையுடனும் மிக நெருக்கமாக நடந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று அண்மைய நாட்களாக உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.

ஆரம்பத்தில் இந்த வீடியோ பங்களாதேஷில் எடுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவிய போதிலும், இது உண்மையில் இலங்கையின் பொலன்னறுவை பகுதியில் எடுக்கப்பட்டதாகும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இந்த வீடியோவில் இருக்கும் 7 வயது சிறுமி பொலன்னறுவையைச் சேர்ந்த சுவேதா புன்சந்தி (Shwetha Punsandi) ஆவார்.

இயற்கையோடு இயைந்த எளிய குடும்ப பின்னணியைக் கொண்ட சுவேதாவுக்கு, சிறு வயது முதலே விலங்குகள் மீது தனி அன்பு இருந்துள்ளது.

ஒருமுறை இவர்களது வீட்டிற்கு அருகில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுச் சென்று பார்த்தபோது, இரும்புத் தகடுகளுக்கு நடுவே காலில் காயம்பட்ட நிலையில் இந்த முள்ளம்பன்றி மறைந்திருந்ததை சுவேதாவின் குடும்பத்தினர் கண்டெடுத்தனர்.

அதற்கு வீட்டில் இருந்த மருந்துகளைக் கொண்டு சில நாட்கள் சிகிச்சையளித்துக் குணப்படுத்தியுள்ளனர்.

குணமடைந்த பின் அது காட்டுக்குள் சென்றாலும், தினமும் சுவேதாவைக் காண மீண்டும் மீண்டும் வீட்டிற்கு வரத் தொடங்கியுள்ளது.

அப்படி உருவானதுதான் இந்த அபூர்வ நட்பு.

முக்கியமாக, இந்த முள்ளம்பன்றியை அவர்கள் கூண்டில் அடைத்து வளர்க்கவில்லை.

அது காட்டில் சுதந்திரமாக வாழ்கிறது, பாசத்திற்காக சுவேதாவைத் தேடி தானாகவே ஓடி வருகிறது.

ஒரு பூனை, ஒரு காட்டு முள்ளம்பன்றி மற்றும் ஒரு குட்டிச் சிறுமி ஆகிய மூவரின் இந்த நிஜ உலக கூட்டணி, மனித நேயத்திற்கும் விலங்குகளின் பாசத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் உலகளவில் பேசப்பட்டு வருகிறது.

Post a Comment