ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகியவற்றுடன் சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாடுகளின் ஊடாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும். தற்போது அரசாங்கம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63 லிருந்து 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும் அதிகரிக்க முயற்சித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்..
எனினும் இந்த இரு உயர் நீதிமன்றங்களிலும் தலா 8 நீதியரசர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான திடீர் அரசியலமைப்புத் திருத்தங்கள் ஜனநாயக முறைமைக்கு மரண அடியையே கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு சவால் விடுக்கப்படுவதுடன், அதன் நம்பகத்தன்மை குறித்தும் பல சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் எழுப்பி நிற்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான பொது மக்கள் கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு சட்ட சங்கம், சட்டத்தரணிகள் சங்கம், கொழும்பு மேன் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள், அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் ஏற்படும் பாதகமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளன. ஆகவே ஜனநாயகத்தையும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தையும் வலுப்படுத்தி, மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்காமல் இருக்கும் நடவடிக்கையே எமது நாட்டுக்கு அவசியமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நீதியை நிலைநாட்டுவதற்கும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் இது பாரதூரமான சவால்களை ஏற்படுத்துவதுடன், நீதித்துறைக்கு விழும் மரண அடியாகவும் அமைந்து காணப்படுகின்றன. "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற மக்கள் ஆணையை மீற வேண்டாம் என நான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறான திடீர் அரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் மக்கள் ஆணை குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் சுயாதீனம் அழிக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
எமது நாட்டுக்கு சர்வாதிகாரம் அவசியமில்லை. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளே அவசியமாகும். இனம், மதம், சாதி, வர்க்க, கட்சி பேதங்கள் இன்றி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி தயார். சர்வாதிகாரத்தை ஒழிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதைக்குமே முன்னிற்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
20 ஆவது திருத்தத்தின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 லிருந்து 20 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 லிருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நீதியரசர்களுக்கு தேவைப்பாடு நிலவினால் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாம் தயார். இருந்த போதிலும், இவ்வாறான முறையில் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீதிமன்றத்திற்கான வசதிகளை பெற்றுக் கொடுப்பதாக அமைந்தாலும், இவ்வாறு ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதிமன்றத்தின் நற்பெயரையும் பிம்பத்தையும் கெடுக்கும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
