மனநலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரனை கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு நபர் ஒருவர் ஆரச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கையில் கத்தியுடன் நேற்று பிற்பகல் சுமார் 2.10 மணியளவில் ஆரச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த நபர், தனது சகோதரனை கொலை செய்துவிட்டதாக பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், ராஜகடலுவ பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அங்கு, கட்டிலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ராஜகடலுவ பகுதியைச் சேர்ந்த டுலேன் அசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபரைப் பகல் நேரத்தில் பராமரித்து வந்தவர் குறித்த சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிவான் பரிசீலனைகளின் பின்னர் ஆரச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
