Posts

துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கும் 40,000 வாகனங்கள்!


ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 1,000 ஆடம்பர வாகனங்கள், அவற்றைப் பொறுப்பேற்பதற்கான அதிகளவிலான தடுப்புக் கட்டணங்களை செலுத்த முடியாத காரணத்தால் இறக்குமதியாளர்களால் கைவிடப்பட்டு வருவதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கான மறு ஏற்றுமதி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதே வாகனங்கள் தேங்கிக் கிடப்பதற்கு முதன்மைக் காரணமாகும்.

உள்ளூர் இறக்குமதியாளர் ஒருவர், கடந்த 6 வருடங்களாகத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர வாகனம் ஒன்றை விடுவிக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், அந்த வாகனத்தை விடுவிக்க சுங்கத் துறையினரால் 50 மில்லியன் ரூபா தடுப்புக் கட்டணமாகக் கேட்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த வாகனத்தின் மொத்தச் செலவு 70 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.

இது அதன் அசல் பெறுமதியை விட 3 மடங்குக்கும் அதிகமான தொகையாகும்.

இவ்வளவு அதிக தொகையை செலுத்த முடியாது என்பதால், குறித்த இறக்குமதியாளர் வாகனத்தை விடுவிக்கும் முடிவைக் கைவிட்டுள்ளார்.

இதேபோன்ற காரணத்தினால் மேலும் பல இறக்குமதியாளர்கள் தங்களது ஆடம்பர வாகனங்களை எடுக்காமல் விட்டுவருவதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் துறைமுகத்திலேயே முடங்கிக் கிடக்கின்றன.

Post a Comment