வெளிநாடொன்றில் பெண் நோயாளியிடம் அத்துமீறிய இலங்கை மருத்துவர்;

 

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பெண் நோயாளி ஒருவருக்கு பாலியல் ரீதியாக அச்சுறுத்தல் மற்றும் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பொது மருத்துவ நிபுணரான வினோ காரியகரவன (49) என்பவரை பெர்த் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், கார்லைல் மருத்துவ மையத்தில் முதுகு வலிக்கான அக்குபஞ்சர் சிகிச்சை பெற வந்த 30 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவரிடம், இந்த மருத்துவர் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

90 நிமிட சிகிச்சையின் போது, அந்தப் பெண்ணின் விருப்பமின்றி அத்துமீறியுள்ளார். மேலும், பெண்ணிடம் தேவையற்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு, தனது குற்றத்தை மறைப்பதற்காக "சிகிச்சை முறைப்படி, கண்ணியமாக நடத்தப்பட்டது என ஒரு போலி பின்னூட்டப் படிவத்தை தயாரித்து, அதில் கையெழுத்திடுமாறு அந்தப் பெண்ணை மருத்துவர் வற்புறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தில் மருத்துவர் தரப்பு வாதாடியபோது, இது தற்செயலாக நடந்த தொடுதல் என்று கூறப்பட்டது. ஆனால், இதனை திட்டவட்டமாக நிராகரித்த நீதிபதி பெலிண்டா கோல்மேன், இது முற்றிலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட அத்துமீறல் என்று கூறி மருத்துவரை குற்றவாளியாக அறிவித்தார்.

இத்தீர்ப்பிற்கு பிறகும், ஆஸ்திரேலிய சுகாதாரப் பயிற்சியாளர் ஒழுங்குமுறை முகமையின் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இவரது மருத்துவப் பதிவு இன்னும் ரத்து செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது.

அதேசமயம் , இவரது ஆன்லைன் பக்கத்தில் "இவர் இனி ஆண் நோயாளிகளை மட்டுமே பரிசோதிப்பார்" என்ற அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment