கொள்கை ரீதியான திட்டத்தின்படி, வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வர வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கையில்"தேவையான கட்டண மாற்றங்கள் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரிகள் இதுவரை பேருந்து சங்கங்களுடன் எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை."எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், எதிர்பார்க்கப்படும் இந்த கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ஒருவரிடம் வினவியபோது, வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் குறித்த யோசனை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் இந்த கட்டண திருத்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
