தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களாகியும், தமிழக வெற்றி கழகத் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் எண்ணை எட்டுவதில் ஏற்பட்டுள்ள சவால்களே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
234 தொகுதிகளைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. நடந்து முடிந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைக் கைப்பற்றியது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தவெக-வின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது.
ஆட்சி அமைக்க இன்னும் 5 உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயமாகத் தேவைப்படுகிறது. இதற்காக வி.சி.க மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுடன் தவெக உயர்மட்டக் குழுவினர் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த விஜய், தான் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருப்பினும், ஆளுநர் உடனடியாகப் பதவியேற்க அழைப்பு விடுக்கவில்லை.
"ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களை நேரில் சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வழக்கமாகத் தனிப்பெரும் கட்சிக்கு முதலிடம் வழங்கப்படும் என்றாலும், இந்த முறை ஆளுநர் மாளிகை சட்ட விதிமுறைகளை மிகத் துல்லியமாகப் பின்பற்றுவது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் இந்த அசாதாரண அரசியல் சூழலைப் பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க மத்திய உளவுத்துறை (IB) மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, ஆளுநர் மாளிகை, தவெக தலைமை அலுவலகம் மற்றும் முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கு மூன்றடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோல், சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளைக் கண்காணிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் தற்போது அரசுமுறைப் பயணமாக வெளிமாநிலம் சென்றுள்ளதால், அவர் சென்னை திரும்பும் வரை பதவியேற்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை. எனினும், வரும் மே 10-ம் திகதிக்குள் பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவு கடிதங்களைத் திரட்டி, மிகப்பிரம்மாண்டமான முறையில் பதவியேற்பு விழாவை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.
