வவுனியா வாழ் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டத்தின் கீழ், வவுனியா மாவட்டத்தில் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 535.95 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாரிய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக 535.95 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை மாவட்டத்தில் உள்ள 505 கிராமங்களை உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த இதுவரை மாவட்ட ரீதியாக 102 பிரஜா சக்தி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை எவ்வித தாமதமுமின்றி விரைவாக ஆரம்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் ஊடாக கிராமப்புறங்களில் உள்ள அடிப்படை வசதிக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. குறிப்பாக வீதிகள், குடிநீர் வசதி மற்றும் ஏனைய வாழ்வாதாரத் தேவைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர , பிரதேச செயலாளர்கள், திட்ட பணிப்பாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் மிக குறுகிய காலப்பகுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என இதன்போது உறுதி அளிக்கப்பட்டது.

Post a Comment