நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (30) நிகழ்ந்த கோர வாகன விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்பொத்த - இகிரியகொட கிளை வீதியின் இகிரியகொட பகுதியில், கெசல்பொத்த நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
நேற்று மதியம் நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், மற்றைய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பெண் மற்றும் அவரது மகள் ஆகியோர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாப்பாகடவெவ, மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஆவார். மஹியங்கனை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று பகல் வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிவேரிய - தெல்கொட வீதியின் வெலிவேரிய நகரில், தெல்கொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, தனக்கு முன்னால் பயணித்த முச்சக்கர வண்டியை முந்த முற்பட்டுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியுடன் மோதி வீதியில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்த கெப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஹேனேகம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிந்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலிகமுவ - அவிசாவளை வீதியின் கொட்டியாகும்புர பகுதியில், கலிகமுவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் மீது மோதி நேற்று விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி தொரணகஹபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அருக்கம்மன பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஆவார்.
நேற்று பகல் மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிஉல்ல - பஸ்யால வீதியின் டி.எஸ். சந்திக்கருகில், பஸ்யால நோக்கி பயணித்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியின் ஒரு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்போது, பின்னால் வந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநரால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநரும், அதன் பின் இருக்கையில் பயணித்த மற்றொரு நபரும் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பின் இருக்கையில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பஸ்யால பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஆவார். விபத்துடன் தொடர்புடைய லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய - அம்பலாங்கொடை வீதியின் கதகந்தகொட சந்திக்கருகில், எல்பிட்டிய நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியின் ஓரமாக நடந்து சென்ற பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று மதியம் நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹிரண, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஆவார். விபத்துடன் தொடர்புடைய லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
