கண்டி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், வாடகை அடிப்படையில் பெறப்பட்ட சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர், கட்டுகஸ்தோட்ட பகுதியில் ஒரு வேன் மற்றும் பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது, சந்தேக நபரிடமிருந்து ஹெராயின், ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு கைபேசிகளையும், போதைப்பொருட்களின் எடையை அளவிடப் பயன்படுத்தப்படும் ஒரு டிஜிட்டல் தராசையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ரணவன பகுதியைச் சேர்ந்த 31 வயது நிரம்பிய, இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்புப் பகுதியிலிருந்து போதைப்பொருட்களை கடத்தி, கண்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
