தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அமைதியாக நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நாளை (4) நடைபெற உள்ளது.
மாநிலம் முழுவதும் மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
மொத்தம் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை போட்டியிட்டன.
குறிப்பாக, புதிதாக களமிறங்கிய விஜயின் கட்சி அதிகளவில் வாக்குகளைப் பிரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால் இறுதி முடிவுகளை துல்லியமாக கணிக்க சவால்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா, அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுமா அல்லது விஜய் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுப்பாரா என்பது நாளைய முடிவுகள் மூலம் தெளிவாகும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பணிக்காக 10,545 பணியாளர்கள் மற்றும் 4,624 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருவர் என 234 பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
மூன்றடுக்கு பாதுகாப்பு முறையும் அனைத்து மையங்களிலும் நடைபடுத்தப்பட்டுள்ளது.
முதல் முறையாக, அனுமதியற்ற நபர்கள் நுழையாதவாறு QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் வாக்குகளுடன் தொடங்கும்.
வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
மேலும் 40ற்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பில் உள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அனைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் தங்கள் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் மூன்று வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு சுமார் 3,000 பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் மாநகரம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை செயல்முறையை சீராக நடத்த தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மொத்தம் 234 வாக்கு எண்ணும் அறைகளும், தபால் வாக்குகளுக்காக 240 கூடுதல் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்று முடிவுகளும் அந்தந்த மையங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.
மேலும் முடிவுகள் “ECI Net” செயலி மற்றும் results.eci.gov.in இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும். மொத்தத்தில், அமைதியாக நடந்த வாக்குப்பதிவை போலவே வாக்கு எண்ணிக்கையையும் அமைதியாக நடத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாளைய தினம் தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
