சரியான பராமரிப்பின்றி அதிகப்படியான புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, புகை உமிழ்வு தொடர்பான பராமரிப்பு உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளைப் புறக்கணிக்கும் அல்லது மேலதிக ஆய்வுகளுக்கு சமூகமளிக்காத வாகன உரிமையாளர்கள், வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் ஏனைய வாகன ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கறுப்புப் புகை வெளியேற்றம் என்பது வெறும் தொழில்நுட்பக் கோளாறு மட்டுமல்லாமல், அது எதிர்கால சந்ததியினரைப் பாதிக்கும் ஒரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் என்பதால், வாகனங்களை முறையாகப் பராமரிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் வாகனப் புகை மாசடைவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் முதல் நாடு தழுவிய ரீதியில் இத்தகைய திடீர் வீதிச் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் (VETTF) தெரிவித்துள்ளது.
நிர்வாக மாற்றங்கள் காரணமாக தற்காலிகமாக மந்தகதியில் இருந்த இந்தச் சோதனைகள், தற்போது மீண்டும் முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
