நீண்ட வார இறுதி விடுமுறை தினங்களில் வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற அனர்த்தங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் தலைவர், சமூக வைத்திய நிபுணர் சமதி சிறிதுங்க கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
"கடந்த காலத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததில், நீண்ட வார இறுதி நாட்களில் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பதைக் காண முடிகிறது.
குறிப்பாக வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற விபத்துகள் இதில் அடங்கும். வெசாக் பண்டிகையை முன்னிட்டு நீண்ட வார இறுதி விடுமுறை கிடைத்துள்ளதால், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என நாங்கள் எதிர்வுகூறுகிறோம்.
சாரதிகள், வாகனங்களில் பயணிப்பவர்கள் அல்லது பாதசாரிகளின் கவனக்குறைவு, வீதிகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் வாகனங்களின் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக விபத்துகள் ஏற்படலாம்.
அதேபோல, தற்போதைய காலநிலையில் நீர் நிலைகளில் திடீரென நீரின் மட்டம் உயர்வடையக்கூடும். இதனால் நீரோட்டங்கள் ஏற்பட்டு ஆபத்தான சூழல் உருவாகலாம். எனவே, நீரில் மூழ்குதல் மற்றும் பிற விபத்துகள் தொடர்பான ஆபத்துகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொதுமக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், மிகவும் கவனமாக இருக்கவும். ஒருவர் நீரில் மூழ்கினால், உரிய பயிற்சி இல்லாத பட்சத்தில், எக்காரணம் கொண்டும் மற்றவர்களின் உயிரை ஆபத்தில் தள்ள வேண்டாம்." என்றார்.
