இலங்கையில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் அதிகப்படியான செலவுகள் காரணமாக, மக்கள் புதிதாக வீடுகளைக் கட்டுவதைத் தவிர்த்து, ஏற்கனவே சிறிய அல்லது பழைய கட்டடங்களைக் கொண்ட நிலங்களை வாங்கி அவற்றை புனரமைக்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லங்கா ப்ரொப்பர்ட்டி வெப் (Lanka Property Web) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தஹம் குணரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு போன்ற பிரதான நகரங்களில் ஒரு பேர்ச் காணியின் விலை 5 முதல் 6 மில்லியன் ரூபா வரை உயர்ந்துள்ள நிலையில், நெடுஞ்சாலை இணைப்புகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள் காரணமாக கொழும்பை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளுக்கான காணித் தேவை அதிகரித்துள்ளது.
ஜா-எல, நீர்கொழும்பு, கஹதுடுவ, பிலியந்தலை, மாலபே ஆகிய பகுதிகளில் தற்போது ஒரு பேர்ச் காணி 1 மில்லியன் முதல் 1.5 மில்லியன் ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கஹதுடுவ போன்ற பகுதிகளிலிருந்து கொழும்பு நகருக்குள் 20 நிமிடங்களில் பயணிக்க முடிவதும் இந்த வரவேற்புக்கு முக்கிய காரணமாகும். தற்போது நாட்டில் குறைந்தது 2,00,000 வீடுகளுக்கான பற்றாக்குறை நிலவுகிறது.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து வரும் போதிலும், வாங்குபவர்களின் வரவுசெலவுத் திட்டத்திற்கும் சந்தையில் உள்ள வீடுகளின் விலைகளுக்கும் இடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது.
அதேவேளை இளம் தலைமுறையினர் வேலைவாய்ப்புக்காக கொழும்பை நோக்கி நகர்வதால், அவர்களின் உண்மையான வருமான நிலைக்கு ஏற்ப, மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களையும், விசேட நிதி வசதிகளையும் அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து அவசரமாக உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
