நாட்டில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக, மீண்டும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை அறிமுகப்படுத்த இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படலாமென அரசாங்க உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலைமையில் குறிப்பாக, டீசல் உள்ளிட்ட எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது, அவற்றைச் சேமிப்பதற்காக அவசர தேவை அரசாங்கத்துக்கு எழுந்துள்ளதாக அந்தத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அண்மைய நாட்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 342.63 ரூபாவாகவும் விற்பனை விலை 354.03 ரூபாவாகவும் அதிகரித்தது.
கடந்த புதன்கிழமை பதிவான 332.23 ரூபாவை விட அதிகமாகும். பின்னர் ரூபா மதிப்பு சிறிதளவு உயர்ந்தது. நிலைமை மேலும் மோசமடைந்தால் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படுமென்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலைமைக்கு மத்திய கிழக்கு போரின் தாக்கமே காரணமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இறக்குமதிச் செலவு, ஏற்றுமதி வருமானத்தை விட மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
அதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியை செலவிட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், வாகன இறக்குமதிக்காக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா, ஏப்ரல் மாதத்தில் இறக்குமதிசெய்யப்பட்ட எரிபொருளுக்காக மட்டும் 522 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தவேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“தற்போது அந்தக் கட்டணத்தைச் செலுத்த முயற்சித்து வருகிறோம். மாதாந்த எரிபொருள் செலவு முன்பு 100–110 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
ஆனால், தற்போது அது 500 மில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைக்கு எரிபொருள் விநியோகம் சீராக உள்ளதாகவும், உலகச் சந்தையில் அதிகரித்துள்ள எரிபொருள் விலையே எங்களுக்கான முக்கிய பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
