டித்வா' அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகை கொடுப்பனவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதேவேளை, மே மாதத்தில் எரிபொருளுக்காக 550 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதால், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
'டித்வா' அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கண்டறிவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (12) விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அங்கு மீள்குடியேற்றத்திற்காகக் காணிகளை விடுவிக்கும் செயல்முறை குறித்துப் பிரதேச செயலக மட்டத்தில் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"மீள்குடியேற்றப் பணிகளை மிக விரைவில் நிறைவு செய்யுங்கள். வீட்டு வாடகை வழங்குவதை மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கிறேன். அதற்குள் இப்பணிகளை முடித்துவிடுங்கள். விலை ஏற்றத்தாழ்வு தொடர்பான பிரச்சினையைத் திங்கட்கிழமைக்குள் தீர்த்து வைக்கிறேன். மார்ச் 1 ஆம் திகதி விலைக்கு எரிபொருள் விலையைச் சரிசெய்வோம். அந்தப் பிரச்சினையைத் தீர்க்கச் சிறிது காலம் தாருங்கள். எரிபொருள் பயன்பாட்டைச் சற்று குறைக்க வேண்டும். மே மாதத்தில் எரிபொருளுக்காக 550 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகச் செலவாகிறது. பெப்ரவரி மாதச் செலவு 200 மில்லியன் டொலர்களுக்கும் குறைவாகவே இருந்தது. சிறிது காலம் தாருங்கள், அதற்கான சுற்றறிக்கையை வழங்குகிறேன். வாகனங்கள் கொள்வனவு செய்வதையும் சற்றே நிறுத்த வேண்டியிருந்தது. இந்த ஆண்டு முடிவதற்குள் தேவையான வாகனங்களை வழங்குகிறேன். இந்தப் பிரச்சினை சிக்கலானது என்பது எனக்குத் தெரியும். பணம் கொடுத்தாலும் ஒரு வீட்டைக் கட்டி முடிப்பது என்பது கடினமான காரியம். இதனைச் வெற்றிகரமாக முடிப்பதற்கு நாம் இணைந்து பணியாற்றுவோம்." எனத் தெரிவித்தார்.
