வித்தியா கொலை வழக்கு-உயர் நீதிமன்று அதிரடி முடிவு

 

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கில், 'சுவிஸ் குமார்' உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று (06) உறுதிப்படுத்தியுள்ளது.

தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை விசாரித்த, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், மேலும் இரு குற்றவாளிகளின் தண்டனையை இரத்துச் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டபோது, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் மூவர் 'சூம்' (Zoom) தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில், யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலை சென்று திரும்பிக் கொண்டிருந்த 18 வயதுடைய பாடசாலை மாணவியானசிவலோகநாதன் வித்யாவை கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் யாழ்ப்பாணத்தில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஏழு பேருக்கு யாழ்ப்பாணம் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

இந்தத் தண்டனையிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி குற்றவாளிகளால் உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மேன்முறையீட்டு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் குற்றவாளி ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment