வடமேற்கு பாகிஸ்தானில் சனிக்கிழமை(09) இரவு நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 15 காவலர்கள் கொல்லப்பட்டதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாக, உள்ளூர் ஊடக அறிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில், சந்தேகப்படும்படியான குண்டுதாரி ஒருவர் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட தனது வாகனத்தை ஒரு காவல்துறை சோதனைச் சாவடியில் மோதியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக டான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, கனரக ஆயுதங்களுடன் இருந்த தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளையும் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியதாக அந்த ஊடகம் தெரிவித்தது.
இந்தக் குண்டுவெடிப்பில் மேலும் மூன்று காவலர்கள் காயமடைந்ததாக நகர காவல்துறைத் தலைவர் சஜ்ஜாத் கான் செய்தியாளர்களிடம் கூறினார் என்றும் அது மேலும் தெரிவித்தது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் பல திசைகளிலிருந்து அந்தச் சோதனைச் சாவடி மீது பலத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்பகுதியில் பல வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், இது உள்ளூர் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
