வாழைச்சேனை பொலிஸாரின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை
பிரபல பெண் போதை வியாபாரியான ஜெஸ்மின் உட்பட மூவரை இரவு வேளையில் தட்டித்தூக்கிய வாழைச்சேனை பொலிஸார்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி மற்றும் பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் பொலிஸாருக்கே சவால் விடும் வகையில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு, பிரதேசத்தின் நாமத்தையும் பிரதேச இளைஞர் சமூகத்தையும் நாசமாக்கி வந்த பிரபல பெண் போதை வியாபாரி மற்றும் இருவரையும் நேற்றிரவு (01.01.2026) வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குற்றப்புலனாய்வுப்பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் 8656-தினேஷ் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பைறூஸ் வீதி, பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை எனும் முகவரியைச்சேர்ந்த 30 வயதுடைய முஹம்மது அலியார் பெளமி என்பவரை சந்தேகத்தில் பேரில் கைது செய்து விசாரணை நடாத்திய போது அவரிடமிருந்து 110 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர் வழங்கிய விரிவான தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜே.எச்.பி.சஜீவ சம்பத் குமாரவின் உத்தரவுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவும் குற்றத்தடுப்புபிரிவினரும் இணைந்து பிரிவுப்பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான 8656-தினேஷ், 92658-அக்ரம், 40258-றிஷோ, 7880-நவனீதன், 100825-திலீபன், பெண் பொலிஸ் உத்தியோகத்தரான 12689-மதுவந்தி மற்றும் விஷேட பிரிவைச்சேர்ந்த பயாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேலும் இருவரைக்கைது செய்தனர்.
இதன் போது, புகையிரதக்கடவை வீதி, ஓட்டமாவடி-01 ஐச்சேர்ந்த ஜெஸ்மின் என்றழைக்கப்படும் 41 வயதுடைய பிரதேசத்தின் பிரபல பெண் போதை வியாபாரியான ஆதம்பாவா நஸீமா 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் பைறூஸ் வீதி, பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை எனும் முகவரியைச்சேர்ந்த 39 வயதுடைய அபுல் ஹஸன் றிபாயா என்பவர் 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மேலதிக சட்டநடவடிக்கைக்காக வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இப்பிரதேசத்தில் போதையை ஒழிக்கவும் போதை வியாபாரிகளைக்கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை அண்மைய கைது நடவடிக்கைகள் மூல தெளிவாகின்றது.
அதே நேரம், இக்கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சிய பிரதேசத்திலுள்ள பிரபல போதை வியாபாரிகள் அதனை முடக்க பொலிஸார் மீது சேறு பூசும் நடவடிக்கைகளையும் பல்வேறு வடிவங்களில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், போதை வியாபாரிகளைக் கைது செய்யும் நடவடிக்கை தொடருமெனவும் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் வினியோகத்தில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் மொத்த வியாபாரியான பிறைந்துரைச்சேனையைச்சேர்ந்த றிஸ்கா என்பவரைத்தேடி வலைவிரித்துள்ளதாகவும் விரைவில் கைது செய்ய தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
