இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இந்த இணக்கத்தை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாலையடிவட்டை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய, 12 பேர்ச் காணியை விடுவிக்கவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பு விமான நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் அறிவித்தலை, மட்டக்களப்பு வான் படையினருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
