Posts

கறுப்பு ஜூலை தொடர்பில் நாடாளுமன்றில் முன்மொழிவு

 


1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்ய ஸ்ரீ ஹேரத் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை சம்பவம் தொடர்பில் முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தல், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் ஆகியன இந்த விசேட குழுவின் முக்கிய நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வரவு - செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானது.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ள சில விடயங்களை நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகத் திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், திருத்தப்பட்ட பிரேரணை மீண்டும் சமர்ப்பிக்கப்படாததால், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தபடி குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெறாது என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment