ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடிய சிறுமி ஒருவர் எழுப்பிய அலறல் சத்தத்தைக் கேட்டு, உடனடியாக ஆற்றில் குதித்த நபர் ஒருவர் சிறுமியைப் பாதுகாப்பாக மீட்ட சம்பவம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கண்டி, தெல்தெனிய – ஒருதொட்டைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் காணொளியில், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுமியைக் காப்பாற்றுவதற்காக குறித்த நபர் ஆற்றில் குதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், பாலத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் நின்றுகொண்டிருந்தபோது, சிறுமி ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சத்தம் கேட்ட திசையை நோக்கி விரைந்து சென்றபோது, சிறுமி ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாமதிக்காமல் தனது மேலாடையைக் கழற்றி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பையை ஓரமாக வைத்துவிட்டு சிறுமியைக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.
பின்னர் தனது நண்பர்களின் உதவியுடன் கயிற்றைப் பயன்படுத்தி சிறுமியைப் பாதுகாப்பாக ஆற்றிலிருந்து கரைக்கு மீட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமுடன் குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உயிரைக் காப்பாற்றத் துணிச்சலுடன் செயற்பட்ட குறித்த நபரின் செயல் சமூக ஊடகங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
.jpg)