மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்

காலியான மதுபானப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளையும் உயர்த்துவதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த விலை உயர்வு முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

காலியான போத்தல்களை உற்பத்தி செய்யும் நிறுவனம், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, 750 மில்லிலீற்றர் போத்தலுக்கு 160 ரூபாவும், 375 மில்லிலீற்றர் போத்தலுக்கு 140 ரூபாவும், 180 மில்லிலீற்றர் போத்தலுக்கு 109 ரூபாவும் கட்டணமாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, அதிகளவில் விற்பனையாகும் 750 மில்லிலீற்றர் 'கல்' மதுபானப் போத்தலுக்கான வைப்புத் தொகை 60 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. அரைப் போத்தலுக்கான வைப்புத் தொகை 40 ரூபாவிலிருந்து 70 ரூபாவாகவும், கால் போத்தலுக்கான வைப்புத் தொகை 20 ரூபாவிலிருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காலியான போத்தல்களை மீளப் பெற்றுக்கொள்ளாத நிறுவனங்கள், போத்தல்களின் மேலதிகச் செலவையும் மதுபான விலையுடன் சேர்த்து நுகர்வோரிடம் அறவிட நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி, 750 மில்லிலீற்றர் 'கல்' மதுபானப் போத்தலின் புதிய விலை, 100 ரூபா வைப்புத் தொகையுடன் சேர்த்து 3,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மதுவரி அதிகரிக்கப்படாவிட்டாலும், காலியான போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவு உயர்ந்துள்ளதால், அந்தச் சுமையை நுகர்வோரிடம் அறவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment