புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் கடுமையான திருத்தங்கள் மூலம் நாடு ஒரு அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து வருவதாக விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னர் அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், முந்தைய சட்டங்களை விடக் கொடூரமான சட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நாட்டை ஒரு அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்திச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
22-வது திருத்தத்தின் மூலம் நீதித்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் கடுமையான திருத்தங்கள் சிவில் குடிமக்களின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகக் கூறினார்.
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அமைதியான போராட்டங்களுக்குத் தேவையான தலைமையை எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும் என்றும், அந்தத் தலைமையின் குறைபாடே மக்களின் குறைந்த விழிப்புணர்வுக்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் காரணமாக எதிர்க்கட்சி மௌனித்துள்ளதா என்ற கேள்விக்கு நகைச்சுவையாகப் பதிலளித்த அவர், 'நாடாளுமன்ற உணவகத்தில் (Canteen) மட்டுமே அவர்களின் வாய் திறக்கிறது' என விமர்சித்தார்.
