கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், வீட்டிலிருந்து காணாமல் போன 17 வயதுடைய பிளஸ் 2 மாணவர், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்குப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அடுத்த பாங்கப்பாறை பகுதியைச் சேர்ந்த மது – தர்மஜா தம்பதியினரின் மகனான அபிராம் (17) என்ற மாணவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி விடுமுறை தினத்தில் வீட்டில் இருந்த அபிராமுக்கு, அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நண்பர் ஒருவரைச் சந்தித்துவிட்டு வருவதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
எனினும், மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர். அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அழைத்தபோது அது அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களிலும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஸ்ரீகாரியம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சைபர் குற்றப்பிரிவினரின் உதவியையும் நாடியுள்ளனர். அவர்கள் அபிராமின் கையடக்கத் தொலைபேசியின் சமிக்ஞையை ஆய்வு செய்தபோது, பாங்கப்பாறை பகுதியில் உள்ள அடர்ந்த புதர் நிறைந்த இடமொன்றில் சமிக்ஞை கிடைத்துள்ளது.
இதன்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் தேடுதல் நடத்தியபோது, புதர்களுக்கு மத்தியில் கிடந்த சாக்குப்பையொன்றை மீட்டுள்ளனர். அதனைத் திறந்து பார்த்தபோது, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அபிராம் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
சடலத்தைப் பரிசோதித்ததில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளில், 17 வயதுடைய சிறுமி உள்ளிட்ட மூவருக்குக் கொலையுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணைகளின்படி, அபிராமுக்கும் குறித்த சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் ஊடாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் சிறுமியைக் காதலித்து வந்த இளைஞருக்குப் பிடிக்காததால், அவர் அபிராமைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், இருவருக்கும் இடையிலான பழக்கம் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த குறித்த இளைஞர், சம்பவத்தன்று சிறுமியின் ஊடாக அபிராமைத் தொலைபேசியில் அழைத்து குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
அதனை நம்பிச் சென்ற அபிராமுடன், சிறுமியின் காதலனும் மற்றொரு நபரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் அபிராமைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் மிதித்ததாகவும், இதனால் அவர் உயிரிழந்த பின்னர் சாக்குப்பையில் கட்டி புதர் பகுதியில் வீசிச் சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, சிறுமி உள்ளிட்ட மூவரையும் காவல்துறையினர் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், கொலையாளிகளின் இலக்கு அபிராமின் நண்பர் ஒருவராக இருந்திருக்கலாம் என்றும், தவறுதலாக அபிராம் இந்தச் சம்பவத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட அபிராமின் தாயும் சகோதரியும் அரபு நாட்டில் பணியாற்றி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
.jpg)