அரசாங்கத்திற்கு எதிராக மொட்டுக் கட்சி மீண்டும் அதிரடி நடவடிக்கை!

 


இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, நாடு முழுவதும் கிராம மட்டத்திலான அரசியல் கூட்டங்களை எதிர்வரும் திங்கட்கிழமை (2) முதல் நடத்தவுள்ளதாக, அக்கட்சியின் செயல்பாட்டுத் தலைவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டங்கள் முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், வாரத்தில் ஐந்து நாட்கள் கட்சிக் கிளைகள் மற்றும் தொகுதி மக்களுடனான சந்திப்புகள் நடத்தப்படவுள்ளன.

கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுன தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அரசாங்கம் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமை மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம், நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், மத்திய வங்கியின் கணினி வலையமைப்பில் ஊடுருவல் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் மற்றும் தவறான கணக்குகளுக்குப் பணம் மாற்றப்பட்டமை உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்களை மக்களிடம் எடுத்துரைக்குமாறு கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரச் சேவைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் மீதான வரிச் சலுகைகள் தொடர்பில் அரசாங்கம் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளையும் மக்களுக்கு நினைவூட்டுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த துறைகளில் வரிகளை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அடித்தள மட்டத்தில் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் கிராம மட்டக் கூட்டங்களை நடத்த பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment