தும்பரவில் தப்பியோடிய கைதி மீது துப்பாக்கிச் சூடு!

 


கண்டி, பல்லேகெல – தும்பர சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயன்ற கைதியொருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தும்பர சிறைச்சாலை வளாகத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சேனக பல்லேவத்த தகவல் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைச் சுவருக்கு அருகிலுள்ள பாதுகாப்பு அறைக்கு ஏறிய குறித்த கைதி, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரியிடமிருந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார்.

இதன்போது, தப்பியோட முயன்ற கைதி மீது குறித்த அதிகாரி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கைதி சிறைச்சாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தும்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment