லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்!

 இலங்கையில் அண்மைக்காலமாக நிலவிய எரிவாயு விநியோகத் தடையைத் தொடர்ந்து, 3,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான திரவப் பெற்றோலிய வாயுவை (LPG) ஏற்றிய கப்பல் இன்று (12) இலங்கையை வந்தடைந்துள்ளதாக LAUGFS Gas PLC நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமது நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயு இறக்கப்பட்டதும், சிலிண்டர்களில் எரிவாயுவை நிரப்பி, நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எரிவாயு விநியோகம் படிப்படியாக அதிகரிப்பதுடன், உள்ளூர் விற்பனை நிலையங்களில் எரிவாயுவின் கிடைப்பனவும் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைக்காலமாக எரிவாயு மீள்நிரப்பலைப் பெற்றுக்கொள்வதில் வாடிக்கையாளர்கள் எதிர்கொண்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நிறுவனம், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது.

மேலும், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக விற்பனை நிலையங்களுக்குச் செல்வதற்கு முன்னர், அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட LAUGFS Gas விற்பனை முகவரிடம் கையிருப்பு தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அல்லது 1345 என்ற நிறுவனத்தின் அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment