குடியிருப்பில் விழுந்து வெடித்த தனியார் விமானம் – அனைவரும் பலி!

 


அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மார்-அ-லாகோ எஸ்டேட்டுக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் தனியார் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஒன்பது பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாம் பீச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லியர்ஜெட் ரகத்தைச் சேர்ந்த தனியார் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இடியுடன் கூடிய மழைக்கு மத்தியில் விபத்து

டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ரோம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், பஹாமாஸில் உள்ள வடக்கு எலூதெரா விமான நிலையத்தை நோக்கிப் பயணித்ததாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துகொண்டிருந்ததாக வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான அக்குவெதர் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் மிகப்பெரிய துயரமாகும் என புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பான காணொளிகள் அதிர்ச்சியளிப்பதாகவும், விமானம் ஏவுகணை ஒன்று விழுந்து வெடிப்பதைப் போன்று தரையில் மோதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், விபத்து தொடர்பில் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அமெரிக்கப் போக்குவரத்துச் செயலாளர் ஷான் டஃபியும் இந்தச் சம்பவத்தைப் பயங்கரமான துயரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

விமானம் விழுந்த இடத்தில் சாலையோரத்தில் பாரிய பள்ளமொன்று ஏற்பட்டுள்ளதாக பாம் பீச் மாவட்ட ஆணையாளர் ஜோயல் புளோரஸ் தெரிவித்துள்ளார். அப்பகுதியிலிருந்து சுமார் 600 பேர் வெளியேற்றப்பட்டு, மாவட்டத்திலுள்ள இரண்டு தற்காலிகத் தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விமானி வெளியிட்ட அவசர எச்சரிக்கை

விபத்துக்கு முன்னர் விமானத்தின் காக்பிட்டிலிருந்த ஒருவர், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியுடன் தொடர்புகொண்டு, பனிப்படிவம் மற்றும் மிதமான காற்றுச் சுழற்சி காரணமாக வேறு உயரத்திற்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், விமானி 'மேடே, மேடே' என அவசர உதவி கோரியுள்ளார். விமானம் நிமிடத்திற்கு சுமார் 10,000 அடி வேகத்தில் கீழிறங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

சில நொடிகளுக்குப் பின்னர், விமானத்தின் கீழிறங்கும் வேகம் நிமிடத்திற்கு 20,000 அடியாக அதிகரித்துள்ளதாகவும், அவசரநிலையை அறிவிப்பதாகவும் விமானி தெரிவித்துள்ளார்.

இதன்போது, “நாங்கள் தரையில் மோதப்போகிறோம்” என விமானி இறுதியாக எச்சரித்ததாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு உரையாடல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது விமானம் நிமிடத்திற்கு சுமார் 22,000 அடி வேகத்தில் கீழிறங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment