அநுராதபுர புனித நகர அபிவிருத்தி வர்த்தமானி மற்றும் பௌத்த மதம் தொடர்பில் அரசாங்க அமைச்சர்கள் வெளியிட்ட கருத்துக்களுக்கு, பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிரானது அல்ல என்ற மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியின் கூற்றை நிராகரித்தார்.
கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி தாம் முன்வைத்த 14 காரணங்களை மீண்டும் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி பதவியேற்பின்போது பிரித் நூல் அகற்றப்பட்டமை, நாடாளுமன்ற நிகழ்வில் ஜயமங்கல கீதம் நிறுத்தப்பட்டமை மற்றும் ருவன்வெலிசேய தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் உள்ளிட்டவற்றை உதாரணங்களாகக் குறிப்பிட்டார்.
மேலும், ருவன்வெலிசேயவைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பது தொடர்பான ஏற்பாடு 2477/44ஆம் இலக்க வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கம்மன்பில, இது தொடர்பில் அமைச்சர்களின் கருத்துக்கள் முரண்படுவதாகவும் விமர்சித்தார்.
புனித நகர அபிவிருத்தியின்போது ருவன்வெலிசேய சேதப்படுத்தப்படும் எனத் தாம் கூறியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்குமாறும் அவர் சவால் விடுத்தார்.
வர்த்தமானி அறிவித்தலில் உள்ள தவறுகளை மறைக்காமல் அரசாங்கம் அவற்றை உடனடியாகத் திருத்த வேண்டும் என்றும், தமக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
