Posts

14 வயது மாணவிக்கு ஏற்பட்ட அவலம்

 


மொனராகலை, அத்திமலே பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர், தோழியின் ஆலோசனையின் பேரில் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுதியொன்றில் தங்கவைக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அத்திமலே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்திமலே, படுலந்த, விலஓய 6ஆம் கட்டைப் பகுதியில் வசிக்கும் குறித்த மாணவி காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி தனது தாயாருடன் அத்திமலே பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். இதன்போது முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற மாணவி, தனது தோழி மற்றும் தோழியின் காதலனுடன் இணைந்து சாதாரண உடைகளுக்கு மாறிய பின்னர், கொழும்பு நோக்கிச் செல்லும் பேருந்தில் பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொழும்புக்குச் சென்றதாகக் கூறப்படும் மாணவியை, அங்கு பெண் ஒருவர் விடுதியொன்றில் தங்கவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், மாணவியின் தாயார் முகநூலில் வெளியிட்ட அறிவித்தலைக் கண்ட மாணவி, கடந்த நவம்பர் 2ஆம் திகதி மீண்டும் பேருந்து மூலம் அத்திமலே பகுதிக்குத் திரும்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாணவி மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக அத்திமலே பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment