கனடாவின் ஸ்கார்புரோ பகுதியில் பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 26 வயதான தமிழ் இளைஞர் ஒருவரை டொரண்டோ பொலிஸார் தேடி வருகின்றனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, கடந்த மாதம் கென்னடி வீதி மற்றும் புரோக்ரஸ் அவென்யூ பகுதிக்கு அருகில் இரவு சுமார் 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தனது வாகனத்தில் அப்பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னர் சந்தேகநபர் அங்கிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்ரஸ் கிருஷ்ணகுமார் என்பவரையே பொலிஸார் தேடி வருகின்றனர்.
அவருக்கு எதிராக தாக்குதல், பாலியல் துன்புறுத்தல், ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு தாக்குதல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச் செல்லுதல், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல் மற்றும் பிணை நிபந்தனைகளை மீறுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
