வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் விசேட கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பும் கலந்துரையாடலும் இன்று (07) நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையால் குறித்த பிரதேசங்களில் மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சஜித் பிரேமதாச கேட்டறிந்தார்.

குறிப்பாக, மக்களின் வருமான மட்டம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வடக்கு, கிழக்கு, மலையகக் குடும்பங்களின் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த பிரதேசங்களில் காணப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு குறைபாடுகள், சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தரமான சுகாதார சேவைகளுக்கான அணுகல், பாடசாலைக் கல்வியில் நிலவும் சிக்கல்கள் மற்றும் குழந்தைகளின் போசாக்கு நிலைமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தற்போது மக்களுக்கு காணப்படும் வரிச்சுமையை தளர்த்தி, நிவாரணங்களை வழங்கக்கூடிய வரவு செலவுத் திட்டத்தை தாம் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ. இராதாகிருஷ்ணன், டாக்டர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, எம். எஸ். உதுமா லெப்பே, பத்மநாதன் சத்தியலிங்கம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment