மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைக்கான சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில், வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துதல், வடக்கு–கிழக்கில் மக்களின் காணி உரிமைகளைப் பாதுகாத்தல், தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை முன்வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதுடன், அதற்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள PSTA சட்டத்தையும் நடைமுறைப்படுத்தக் கூடாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஜனநாயகம், மனித உரிமைகள், சமூக நீதி மற்றும் தேசிய இனங்களுக்கிடையிலான சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் கட்சியின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
