வேலியே பயிரை மேயலாமா? என்ன கொடுமை இது?

 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட மினுவாங்கொட மாவட்ட நீதிமன்றப் பதிவாளர், ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன தொடர்புடைய வழக்கு ஒன்றில், அவருக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தரும் நோக்கில், கொழும்பு மேல் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு ரூ. 50,000 இலஞ்சம் வழங்குவதற்குத் துணை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, சந்தேகநபரான பதிவாளரை ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சார்பில் ஆஜரான பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியின் சமர்ப்பிப்புகளை ஆராய்ந்த பின்னரே, கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரஹம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரசாந்த கொடவெல சமர்ப்பித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 'சரித்' என்பவரே முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார் என்றும், அவரது கைப்பேசியில் இருந்த வாட்ஸ்அப் செய்திகளை ஆய்வு செய்தபோதே தற்போதைய சந்தேகநபர் பற்றிய தகவல்கள் வெளிவந்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


சந்தேகநபருக்கும் சரித் என்பவருக்குமிடையே குறித்த இலஞ்சப் பணப் பரிவர்த்தனை தொடர்பான குரல் பதிவுகளும் குறுஞ்செய்திகளும் பரிமாறப்பட்டுள்ளதாகவும், எனினும் சந்தேகநபர் தனது கைப்பேசியிலிருந்து வாட்ஸ்அப் செயலியை நீக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.




இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் தொடர்வதால், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.


சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு பணத்தையும் தனது கட்சிக்காரர் பெறவில்லை எனச் சமர்ப்பித்தார்.


இருதரப்புச் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


Post a Comment