ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியதை ஏற்க முடியாது!

கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி, கைதி உடையை அணிவிக்க எடுத்த நடவடிக்கையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மக்கள் கூட்டு எதிர்க்கட்சி, பௌத்த துறவிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது பௌத்த சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாரம்பரியங்கள் மற்றும் ஒழுக்க விதிகள் மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஒழுக்க பீடகத்தின்படி, துறவி ஒருவரின் காவி உடையை அகற்றுவதற்கான அதிகாரம் அவர் துறவறம் பூண்ட நிகாயத்துக்கே இருப்பதாகவும், அதற்கு அப்பாற்பட்டு வேறு எந்தத் தரப்பினராலும் காவி உடையை அகற்ற முடியாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு கைதி உடை அணிவிக்கப்பட்ட சம்பவம் தூரநோக்கற்ற மற்றும் தன்னிச்சையான நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ள மக்கள் கூட்டு எதிர்க்கட்சி, இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், அரசியலமைப்பின் 9ஆம் பிரிவின் மூலம் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை நினைவூட்டியுள்ள மக்கள் கூட்டு எதிர்க்கட்சி, பௌத்த மதம் தொடர்பில் எந்தவொரு தரப்பும் தன்னிச்சையாகச் செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Post a Comment